×

வரம் தரும் அம்பிகையர்

*விழுப்புரம் மாவட்டம், வானூரில் 72 அடி உயர பிரத்யங்கிரா தேவியை தரிசிக்கலாம்.

*திருநெல்வேலி, பாளையங்கோட்டையில், எந்தக் கொடிய நோயையும் தீர்க்கும் ஆயிரத்தம்பாள் அருள்கிறாள்.

*கும்பகோணம், திருநறையூரில் வைகாசி மாத அமாவாசைக்கு அடுத்த வெள்ளிக்கிழமையிலிருந்து சமயபுரம் மாரியம்மன், பத்து நாட்கள் ஆகாசமாரியாய் காட்சி தந்து பின் சமயபுரம் செல்வதாக ஐதீகம்.

*கோவை சாலையில், வயலூரில் சக்திபுரி கோயிலில் இச்சா, ஞான, கிரியா சக்திகளின் சங்கமமாக பராசக்தியாக அருள்கிறாள்.

*சிவகங்கை, தாயமங்கலத்தில் அருளும் முத்துமாரிக்கு பங்குனி மாதம் பொங்கல் வைக்கிறார்கள். கோயிலுக்கு வர இயலாதவர்கள், தத்தமது வீட்டிலேயே அன்னை உள்ள திசை நோக்கி பொங்கல் வைக்கிறார்கள்.

*திருச்சி உறையூரில் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் அருகேயுள்ள ஜெயகாளிகாம்பாளுக்கு வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் நிவேதித்த இஞ்சிச்சாறு, தேன் கலவை பிரசாதத்தை, சரியாக பேச்சு வராத குழந்தைகளின் நாவில் தடவ அவர்கள் சரளமாக பேசும் அற்புதம் நிகழ்கிறது.

*கும்பகோணம், சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் விஷ்ணுதுர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, சிவதுர்க்கை மூவரையும் ஒரே சந்நதியில் தரிசிக்கலாம்.

*மதுரை – அழகர்கோயில் சாலையில் உள்ள முத்தப்பநாராயணர் – கருமாரி திருக்கோயிலில் 65 அடி உயர சுதை வடிவில் பதினாறு திருக்கரங்களுடன் பக்தர்களின் நோய்களை தீர்க்கிறாள் ஆயுர்தேவி.

*மன்னார்குடி – கும்பகோணம் பாதையில், பூவனூர் சதுரங்கவல்லப நாதர் ஆலயத்தில் சாமுண்டீஸ்வரி தேவி அருள்பாலிக்கிறாள். விஷக்கடியினால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கே தரப்படும் கயிற்றை கையில் கட்டிக் கொண்டு நிவாரணம் பெறுகின்றனர்.

*காஞ்சிபுரம், கலவையில் அருளும் அங்காளபரமேஸ்வரி கோயிலில் பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் தங்கள் புகைப்படத்தை பிரேம் போட்டு வைக்கிறார்கள்.

*ஈரோடு – அந்தியூரில் ஆலய பத்ரகாளியம்மன் பக்தர்களின் கனவில் வந்து பலன் சொல்லி, குறை களைகிறாள்.

*திருவாரூர், ஆனந்தகுடி, சோமேஸ்வரர் சந்நதியில் துர்க்கா தேவியும் எழுந்தருளியுள்ளாள். இந்த இருவருக்கும் பூஜைகள் முடிந்த பின்பே அம்பிகை சோமகலாம்பிகைக்கு நடக்கின்றன. இந்த துர்க்கை கல்யாண வரம் அருள்பவள்.

*கோவை அத்தனூர் மாரியம்மன் மகாமண்டபத்தில் உள்ள ஆண்பூத சிற்ப பகுதியில் பல்லி வாக்கு கேட்டால் காரிய வெற்றி என்றும் பெண்பூத சிற்ப பகுதியில் கேட்டால் காரியத்தடை என்றும் நம்பிக்கை நிலவுகிறது.

*தேனி, வீரபாண்டியில் ஆலயம் கொண்டுள்ள கௌமாரியம்மன், சருமநோய் தீர்க்கிறாள்; மழலை வரம் அருள்கிறாள். சித்திரை திருவிழாவில் தீச்சட்டி ஏந்தியும், ஆயிரம் கண் பானை ஏந்தியும், சேந்தாண்டி வேஷமிட்டும் நேர்த்திக் கடனை செலுத்துகிறார்கள் பக்தர்கள்.

*திருமீயச்சூரில் லலிதா ஸஹஸ்ரநாமத்தை இயற்றிய வஸின்யாதி வாக்தேவதைகள் காஞ்சி காமாட்சி கருவறையில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட யந்திரத்தில் அருள்கின்றனர். அம்மனுக்கான வழிபாடுகள் அந்த யந்திரத்திற்கே செய்யப்படுகின்றன.

*திருக்கோவிலூர் – திருவெண்ணெய்நல்லூர் பாதையில் உள்ள சின்னசெவலையில் காட்சி தரும் காளியை கம்பரும், சடையப்பரும் வழிபட்டுள்ளனர். கம்பர் ராமாயணம் எழுதியபோது இந்த தேவி தீப்பந்தம் பிடித்ததாக தலவரலாறு
சொல்கிறது.

*திருவாரூர், குடவாசல், பருத்தியூரில் பண்ணையாரால் ஏமாற்றப்பட்ட விவசாயிக்காக நீதிமன்றத்திற்கு வந்து சாட்சி சொன்ன அம்பிகையாய் சந்தனமாரியாக அருள்கிறாள்.

*ஈரோடு – காங்கேயம் சாலை, அறச்சாலை தலத்தில், அம்மன் உத்தரவு கேட்க 3 வெள்ளை நிறப்பூக்களும், 3 சிவப்பு நிறப் பூக்களும் அன்னையின் முன் திருவுளச்சீட்டாக பயன்படுத்தப்படுகின்றன.

*திண்டிவனம் – மயிலம் பாதையில் உள்ள திருவக்கரையில் வக்ரகாளியாய் பராசக்தி கொலுவிருக்கிறாள். வக்ராசுரனை அழித்த இந்த அம்பிகையை பௌர்ணமி நாளில் தரிசிக்க நம் வாழ்வில் ஏற்படும் வக்ரங்கள் விலகுவதாக ஐதீகம்.

*நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒருவந்தூரில், பிடாரி செல்லாண்டியம்மன் ஆலயம் பிரசித்தி பெற்றது. இங்கு உப்பு மண்ணே பிரசாதமாக வழங்கப்படுகிறது. அந்த மண் பிரசாதத்தை நெற்றியில் இட்டுக் கொண்டால் வினைகள் தீர்வதாக நம்பிக்கை நிலவுகிறது.

The post வரம் தரும் அம்பிகையர் appeared first on Dinakaran.

Tags : Villupuram District ,Vanur ,Pratyangira Devi ,Tirunelveli ,Palayankottai ,Ayirathambal ,Samayapuram ,Mariamman ,Vaikasi ,Tirunaraiyur, ,Kumbakonam ,
× RELATED மதுபோதையில் தந்தையைக் கத்தியால் குத்திக் கொலை செய்த மகன் கைது